search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் உள்ளாட்சி தேர்தல்"

    அசாம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 65 சதவீதம் வாக்குகள் பதிவானது. #Assamcivicpolls
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இந்நிலையில், இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு இன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்ட 43,515 வேட்பாளர்களில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் காலையில் இருந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    பொதுவாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தாலும் மத்திய அசாம் பகுதிக்குட்பட்ட கோலாகட் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியின் அருகாமையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய முன்னாள் வீரர் கியானேந்திரா ராஜ்கோவா என்பவர் கொல்லப்பட்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

    இன்றைய தேர்தலில் சராசரியாக 65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை தெரிவித்துள்ளது.

    வரும் 9-ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இருகட்டங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியிடப்படும். #Assamcivicpolls
    ×